sureshkannan’s posterous

மிஸ்டர் பொதுஜனமும் புதன்கிழமையும்

இந்தியத் திரைப்படங்களுக்கே உரித்தான, கலவையான அம்சங்களுடன் கூடிய திரைக்கதையை தவிர்த்து நேர்கோடான திரைக்கதையைக் கொண்டு வரும் திரைப்படங்கள் மிக சொற்பமானது. அவ்வகையான படங்கள் தற்போது இந்திப்படவுலகில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இருமாதங்களுக்கு முன் Aamir என்கிற திரைப்படத்தைப் பார்த்தேன். அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு திரும்பிவரும் டாக்டர் ஒருவர் மதவன்முறையாளர்களிடம் சிக்கித் தவிக்கும் சில மணிநேரங்களை பரபரப்பையூட்டும் அற்புதமான திரைக்கதையைக் கொண்டு சிறப்பாக அமைந்திருந்தார்கள். அதே வகையில் நேற்று பார்த்த இன்னொரு இந்திப்படம் 'A Wednesday'. டைம்ஸ் ஆ·ப் இந்தியா இதற்கு நான்கு நட்சத்திரங்களை அளித்திருந்தது. நமீதா அம்மணி தனது clevage-ஐ காட்டாமல் நடிப்பது போன்று இது மிக அபூர்வமானது.

பெரிய அளவிலான வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்து உயிர்ச் சேதம் அதிகமாக இருக்கும் போது, பொது ஜனங்களாகிய நாம் பொதுவாக என்ன செய்கிறோம்? பீதியுடன் அரசின் கையாகாலாததனத்தை விமர்சிக்கிறோம்; உறவினர்கள் பத்திரமாக இருக்கிறார்களா என்று விசாரித்துக் கொள்கிறோம்; தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் வரும் இரத்தக்களறியான படங்களை செயற்கையான பரபரப்புடன், குரூரத்துடன் ரசிக்கிறோம்; வெட்டியாக விவாதிக்கிறோம். சுருக்கமாக, நமக்கும் நம்மைச் சேர்ந்தவர்களுக்கும் எந்தவித பிரச்சினை இல்லையெனில் (இருந்தாலும் கூட) சிறிது காலத்திற்கு பேசிப் புலம்பி விட்டு மறந்து விடுகிறோம். அவ்வாறான தேசியக்குணத்தை நோக்கி அழுத்தமாக ஒரு கேள்வி கேட்பதுதான் "A Wednesday". ஆனால் கேள்வி கேட்கும் முறையில்தான் வித்தியாசப்பட்டு நிற்கிறது இந்தப்படம்.

()

தனது பர்ஸைக் காணோம் என்று காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வருகிறார் ஒரு பெரியவர். (நஸ்ருதீன் ஷா) வந்தவர் ஒரு பொ¢ய பையை காவல்நிலைய கழிப்பறைக்குள்ளே ஒளித்து வைக்கிறார். பின்பு போலீஸ் கமிஷனரை (அனுபம் கெர்) அழைத்து நகரத்தின் முக்கிய ஐந்து இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் தன்னுடைய கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் அவைகளின் இடத்தை தெரிவிப்பதாகவும் போதெரிவிக்கிறார். அவரின் கோரிக்கை என்னவென்றால், மத வன்முறையை தூண்டும் பொருட்டு நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் ஈடுபட்டு சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள, நான்கு பயங்கர குற்றவாளிகள் விடுவிக்கப்பட வேண்டும்.

அவர் யார்? அவர் திட்டத்தின்படி குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டார்களா அல்லது காவல்துறை ஜெயித்ததா என்பதை படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.

()

வங்கி அதிகாரி மாதிரி கண்ணியமான தோற்றத்துடன் அறிமுகமாகும் நஸ்ருதீன் ஷா எதையோ ஒளித்து வைப்பதில் ஆரம்பிக்கும் பரபரப்பான திரைக்கதை ஏறக்குறைய பட இறுதியின் வரையில் நீடித்து இருக்கையின் நுனியில் நம்மை அமர வைத்து ஒரு சிறந்த காண்பனுபவத்தை வழங்கியிருக்கிறது. மாத்திரமல்லாமல் வன்முறைச் சக்திகள் குறித்து நமக்குள் ஒரு கேள்வி எழுப்புவதின் மூலம் சலனத்தையும் உருவாக்குகிறது. நஸ்ருதீன் மற்றும் அனுபம் கெர் என்கிற இரு பெரும் தலைகளும் போட்டி போட்டு நடித்து படத்தை முழுக்கவும் தாங்கி நிற்கின்றனர். சிறிது கூட பதட்டமே இல்லாமல் தன்னுடைய திட்டங்களை நிறைவேற்றும் ஷா ஒரு புறம் கலக்குகிறார் என்றால்  வழக்கமான அரசியல் தாமதங்களுக்கு ஈடுகொடுத்து மிகப் பெரிய சதியை முறியடிக்க டென்ஷனுடன் அனுபம் திட்டமிடும் வேகமும் மிக அழகாக பொருந்திப் போயிருக்கின்றன. போலீஸ் கமிஷனர் பாத்திரம்தான் என்றாலும் வழக்கம் போல் அல்லாமல் காய்கறி வாங்க வந்த மாமா மாதிரி பைஜாமாவிலேயே அனுபமை காண்பித்திருப்பது மாறுதலான ஆறுதலாக இருக்கிறது.

நிகழ்வுகள் உருவாகும் வரை பொறுமையில்லாமல் 'செய்திகளை உருவாக்கும்' நிறுவனங்களையும் அவர்களின் பொறுப்பின்மையையும் கூட இந்தப்படம் கிண்டலடிக்கிறது.

()

படத்தின் ஆரம்பக் கட்டத்திலேயே நஸ்ருதின் ஷாவின் திட்டத்தை என்னால் யூகிக்க முடிந்துவிட்டாலும் அதையும் மீறி படத்தை பரபரப்புடன் பார்க்க வைத்தது, படுவேகமான திரைக்கதைதான். ஒரு அழகான சிறுகதையைப் போல சில மணிநேரங்களே படத்தின் நிகழும் காலம். கிளைமாக்சில் விஜய்காந்த் போல நஸ்ருதின் ஷா ஒரு லெக்சர் அடித்தாலும் அவர் சொல்வதில் உள்ள நியாயம் நமக்குள் உறைக்கிறது. வித்தியாசமான காட்சிக் கோணங்களும் திறமையான எடிட்டிங்கும் இந்தப்படத்தை உயரத்தில் அமர்த்தி வைக்கின்றன. (திரைப்படங்களின் மகாஅபத்தமான விஷயமான பாடல்கள் இதில் கிடையாது). லாஜிக் ஓட்டை உட்பட சில குறைகளும் உண்டுதான். படம் அரைமணி நேரத்திற்கு முன்னதாக முடிந்துவிடுகிறது. நஸ்ரூதினின் தரப்பை விளக்க அதை இழுத்திருக்கிறார்கள். அறிமுக இயக்குநரான நீரஜ் பாண்டே முதல்படத்திலேயே தனது வருகையை மிக அழுத்தமாக பதித்திருக்கிறார். பாராட்டுகள்.

நிச்சயம் ஒருமுறை பார்க்கலாம். I recommend.

Loading mentions Retweet

Comments [1]

ஜெயகாந்தன் எழுதுவதை நிறுத்தினது சிறந்ததா?

முந்தைய பதிவின் தாக்கத்தினாலோ என்னவோ இன்றைக்கு அலுவலகத்திற்கு லீவ் போட்டு விட்டு காலை 06.00 மணிக்கு எழுப்புவதற்காக மொபைலில் இருந்த அலாரத்தை ஆஃப் செய்து விட்டு நிம்மதியாக ஒன்பது மணிவரை தூங்கினேன். சமீபத்தில் திரைப்படங்களை அதிகம் பார்க்கத் துவங்கினதில் இருந்து புத்தக வாசிப்பு என்பது குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து போனது. எனவே இன்று தொலைக்காட்சியை முற்றிலும் புறக்கணிப்பது என்று முடிவு செய்து நீண்ட நாட்கள் வாசிக்காமலிருந்த புத்தகங்களில் ஒன்றை random ஆக உருவினேன்.

ஜெயகாந்தனின் ' ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்" புதினத்தை வாசிக்கத் துவங்கினேன். நாவல் எழுதப்பட்ட ஆண்டு 'எழுபதுகள்' என்பதனால் புத்தகத்தின் மீது மட்டுமல்லாமல் உரைநடையின் மீதும் பழைய வாசனையை உணர முடிந்தது.  ஆனால் விட்டுவிட்டு வாசித்தும் கூட  மூன்றரை மணி நேரத்திற்குள்ளாக நாவல் முழுவதையும் வாசிக்க முடிந்ததற்கு ஜெ.காவின் சுவாரசியமான கதை அமைப்பு என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

 'ஹென்றி' என்கிற ஒரு அன்னியன் 'கிருஷ்ணராஜபுரம்' என்கிற ஊருக்குள் நுழைவதில் கதை ஆரம்பிக்கிறது. தேவராஜன் என்கிற உள்ளூர் ஆசிரியர் இவனுடன் நட்பாகிறார். ஊர்க்காரர்களைப் போலவே வாசிக்கிற நமக்கும் ஹென்றியின் பின்புலம் குறித்து அறிந்து கொள்ளும் ஆவலை ஆசிரியர் ஏற்படுத்தி விடுகிறார். ஹென்றியின் பாத்திரம் மிகச் சுவாரசியமாக அமைக்கப்பட்டுள்ளது. அவனுடைய பெற்றோர் யார் என்பது யாருக்குமே தெரியாது.  இந்து மத அப்பனையும் கிறிஸ்துவ மத அம்மையாலும் சுவீகாரம் எடுக்கப்பட்டவன். இந்த உலகத்தின் நிகழ்வுகள் அனைத்தையுமே குழந்தையின் இருதயத்தோடுதான் நோக்குகிறான். கிழங்கு விற்பவளையும் வேலைக்காரச்சிறுவனையும் ஊர்மணியக்காரரையும் ஒரே நோக்கில்தான் பார்க்கிறான். பைத்தியமாக நுழையும் ஒரு பெண் திகில் படத்தில் வருவதைப் போல மறைந்துவிடுவதோடு முடியும் இந்த நாவல் அந்தக் காலத்தில் மிகவும் சிலாகிக்கிப்பட்டிருக்கிறது. தம்முடைய நாவல்களிலேயே சிறந்தது என்று ஜெ.காவே இதைக்கொண்டாடுகிறார்.

இவ்வளவு சிறந்த படைப்புகளைத் தந்த ஜெ.கா. எழுதுவதை நிறுத்திக் கொண்ட போது அவரது வாசகர்கள் அல்லாதவர்களும் அதிர்ச்சியடைந்தார்கள். என்னைக் கேட்டால் அவர் செய்தது மிகச் சிறந்த காரியமென்பேன். Intellectual Menopause ஏற்படுவதற்கு முன்னாலேயே ஒவ்வொரு படைப்பாளியும் தன்னுடைய ஓய்வை அறிவித்துவிட வேண்டும். தொலைக்காட்சிகளில் பரதம் ஆடும் மாமிகள் போல் இம்சைப்படுத்தக்கூடாது.

சமீபத்தில் வார்த்தை இதழ்களில் அவரது பதில்களை படிக்கும் போது அவர் எழுதாமலிருக்க முடிவு செய்தது எவ்வளவு நல்ல காரியம் என்பது புலனாகிறது.

 

Loading mentions Retweet

Comments [0]

கொஞ்ச நேரம் சும்மா இரேண்டா

நண்பர் ஒருவருக்காக சாலையில் ஐந்து நிமிடம் காத்திருந்தேன். அந்த ஐந்து நிமிடத்தை பொறுமையாக கடக்க என்னால் இயலவில்லை. முதல் நிமிடத்தில் இன்னொரு நண்பருக்கு தொலைபேசினேன். 'பிஸியாக இருக்கிறேன். அப்புறம் பேசுகிறேன். மன்னிக்கவும்" என்று பதில் வந்தது. பிறகு மொபைலில் இருக்கிற தேவையில்லாத மெசேஸ்களை அழித்தேன். சாலையைப் பார்த்தேன். நண்பர் வருவதாய் காணோம். மூன்றாவது நிமிடத்திலேயே என் பொறுமை தொலைய ஆரம்பித்தது. தாமதிக்கிற நண்பர் மீது எரிச்சலாய் வந்தது. வீட்டிற்கு தொலைபேச முயன்று தொடர்பு கிடைக்காததால் எரிச்சல் இன்னும் கூடியது. சற்று நேரம் சாலையின் போக்குவரத்தை வேடிக்கை பார்த்தேன். திரும்பவும் நண்பர் வருகிறாரா என்று ஒரு தொலைநோக்கு பார்வை பார்த்தேன். வருவதாய் காணோம்.

எரிச்சலின் உச்சக்கட்டத்தில் நண்பருக்கே தொலைபேசி, "என்னங்க, எவ்ளோ நேரம்" என்றேன் கட்டுப்படுத்த முடியாத கோபத்துடன். என் குரலில் தெரிந்த குரூரம் எனக்கே பீதியூட்டியது.

()

பிறகு சாவகாசமாக யோசித்துப் பார்த்துப் பேர்து ஏன் அவ்வளவு ரெஸ்ட்லெஸ்ஸாக இருந்தோம் என்று ஆச்சரியமாக இருந்தது. அலுவலகத்தில் கணினியில் வேலை முடிந்த பிறகும் தேவையேயில்லாமல் எதையோ நோண்டிக் கொண்டிருக்கிறேன். சற்று நேரம் இணையத் தொடர்பிலோ அல்லது மின்தொடர்பிலோ துண்டிப்பு ஏற்பட்டால் கை நடுக்கத்துடன் எப்போது அது சரியாகும் என்ற பதட்டம் ஏற்படுகிறது. தொலைக்காட்சி பார்க்கும் போது கூட ஒரு சானலில் சற்று நேரம் தொடர்ந்து தங்கவிடாமல் ரிமோட்டை மாற்றி மாற்றி அழுத்தத் தோன்றுகிறது.  திரைப்பாடல்களின் ஒரு தொகுப்பை கேட்டுக் கொண்டிருக்கும் போதே மனம் சட்டென்று இன்னொரு தொகுப்பில் உள்ள பாடல் ஒன்றை கேட்டு தாவச் சொல்கிறது.

"சும்மா இரு" என்று தத்துவார்த்த ரீதியில் சொல்லப்படும் வார்த்தையைக் கடைப்பிடிப்பது என்பது கேட்ட கணத்தில் எளிதாக தோன்றினாலும் நடைமுறையில் அதை சாத்தியப்படுத்துவது எவ்வளவு கடினம் என்பது புலனாகிறது.

 

Loading mentions Retweet

Comments [3]

வணக்கம் நண்பர்களே!

"அவன விடுங்க. ஓசியில கெடச்சா பெனாயில கூட குடிப்பான்" என்பார் கவுண்டமணி, ஒரு திரைப்படத்தில். அதைப் போல் இணையத்தில் எதையோ நோண்டிக் கொண்டிருக்கும் போது இது கிடைத்தது. உடனே இணைந்து விட்டேன். :-)

பொதுவாக என்னுடைய பதிவில் (http://www.pitchaipathiram.blogspot.com/) சிறிய பதிவுகளைப் பிரசுரிப்பதை தவிர்ப்பது என்னுடைய வழக்கம். ஆனால் நான் ரசித்த பாடல்கள், புத்தகத்தின் சில வரிகள், விஷயங்கள் ஆகியவற்றைப் பகிர்நது கொள்வதற்கு இது ஏற்றதாக இருக்கும் போல் தெரிகிறது. பார்ப்போம்.

Loading mentions Retweet

Comments [2]